தூத்துக்குடியில் ரூ.83 கோடி செலவில் மழைநீர் வடிகால் அமைக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடியில் ரூ.83 கோடி செலவில் மழைநீர் வடிகால் அமைக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-06-29 13:15 GMT

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் ரூ.83 கோடி செலவில் மழைநீர் வடிகால் அமைக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் நேற்று காலை கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் உள்ள மண்ணை முன்னுரிமை அடிப்படையில் அகற்றுவது. சாலையோரங்களில் மணல் தேங்கி கிடக்கிறது. இதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது, பிளாஸ்டிக் பைகள் மாநகராட்சி பகுதியில் தடை செய்வது ஆகிய 3 தீர்மானங்களை முன்மொழிந்தார். அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம்

மேலும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட சங்கரப்பேரி, பண்டாரம்பட்டி, மீளவிட்டான், தூத்துக்குடி ரூரல், முத்தையாபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த 2015-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது மழைநீர் சூழ்ந்து பாதிப்புக்கு உள்ளானது. வரும் காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்க வரைவு திட்டம் தயார் செய்யப்பட்டு 4 பகுதியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

3 கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் 4-வது கட்டமாக 289 கிலோமீட்டர் நீளத்துக்கு ரூ.690 கோடியே 69 லட்சம் செலவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், தனசேகர் நகர், ரகுமத்நகர், அய்யாச்சாமி காலனி, பொன்சுப்பையா நகர், லூர்தம்மாள்புரம், செயிண்ட் மேரிஸ் காலனி ஆகிய பகுதிகளில் ரூ.82.98 கோடி மதிப்பில் 36.36 கிலோ மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் 15 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, மாநகர நல அலுவலர் அருண்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்