திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் கவர்னருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் கவர்னருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் பகுதியில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் மாவட்ட ஊராட்சி குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாரதிராமஜெயம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சிக்குழு செயலர் கருணாநிதி வரவேற்றார்.
கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்து கொள்வது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான வரவு, செலவு அறிக்கை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் தமிழக அரசின் 2023-ம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்ட உரையில் தமிழக அரசின் கொள்கைகளை படிக்க தவிர்த்து பேசிய கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.