மேளம் இசைக்க எதிர்ப்பு
பழனி திருஆவினன்குடி கோவிலில் மேளம் இசைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பக்தர்கள் வாக்குவாதம் செய்தனர்.
பழனி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள், அலகு குத்தி வரும் பக்தர்கள் அடிவாரம் திருஆவினன்குடி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகே மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதேபோல் தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து திருஆவினன்குடியில் வைத்து காவடி ஆட்டம் ஆடுவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் வளாக பகுதியில் மேளம் இசைப்பது தொடர்பாக இரு பக்தர்கள் குழு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் உள்பகுதியில் மேளம் இசைக்க அனுமதியில்லை என அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் கோவை பகுதியை சேர்ந்த பக்தர்கள், காவடி எடுத்து திருஆவினன்குடிக்கு வந்தனர். பின்னர் கோவில் உள்பகுதியில் மேளம் இசைத்து ஆட முற்பட்டனர். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் தரப்பில், கோவில் வளாகத்தில் ஆடக்கூடாது என தெரிவித்தனர். இதற்கு சில பக்தர்கள் கோவில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பழனி அடிவாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.