மின்மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
இடங்கணசாலை நகராட்சியில் மின்மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இளம்பிள்ளை
இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட சின்னேரி பகுதியில் மின்மயானம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கஞ்சமலையூர், இ.காட்டூர் மெய்யனூர் மற்றும் இடங்கணசாலையை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர், நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து தலைவர் கமலக்கண்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் சின்னேரி பகுதியில் மின் மயானம் அமைத்தால் காற்று மாசுபடும், பொதுமக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படும், மேலும் நீர்வரத்து தடைபடும். எனவே அந்த பகுதியில் மின் மயானம் அமைக்க கூடாது என தெரிவித்திருந்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.