அரசு விழாவில் பூஜை செய்ய தர்மபுரி எம்.பி. எதிர்ப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு விழாவில் பூஜை செய்ய தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-07-16 16:48 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு விழாவில் பூஜை செய்ய தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பூமி பூஜை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் ஆலாபுரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி மத்திய அரசின் பிரதம மந்திரி கிரிஸ் சன்சாயி யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. இப்பணி தொடக்க விழா நடந்தது.

இதில் செந்தில்குமார் எம்.பி., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் சென்றனர். பொதுப்பணித்துறை சார்பில் ஆலாபுரம் ஏரிக்கரையில் பூமி பூஜை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இதை பார்த்த செந்தில்குமார் எம்.பி. திடீரென கோபமடைந்து செயற்பொறியாளர் குமாரிடம், அரசு விழாவில் இதுபோன்று இந்து முறைப்படி பூஜைகள் நடத்தக்கூடாது என விதிமுறைகள் உள்ளனவா?, இல்லையா?, உங்களுக்கு தெரியுமா? ,தெரியாதா? உங்கள் போஸ்ட் என்ன? என ஆவேசமாக கேட்டார். திராவிடர் கழகத்தினர் எங்கே? கிறிஸ்தவர் எங்கே? முஸ்லிம் எங்கே? என ஆவேசமாக கேட்டார். இதனால் செயற்பொறியாளர் குமார் செய்வதறியாது திகைத்து நின்றார்.

எல்லோருக்குமான ஆட்சி

பின்னர் அரசு நிகழ்ச்சியில் இந்து முறைப்படி மட்டும் பூஜைகள் செய்ய எம்.பி. எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக அங்கு வைக்கப்பட்டு இருந்த பொருட்களை அகற்ற உத்தரவிட்டார். இது எல்லோருக்குமான ஆட்சி. இது திராவிட மாடல் ஆட்சி. இதுபோல் ஒரு மதத்தினரின் பூஜை மட்டும் செய்தால் என்னை அழைக்க வேண்டாம். பூஜை செய்ய வேண்டாம் என்று நான் கூறவில்லை. ஆனால் பிற மதத்தினர் உள்ளிட்ட அனைவரையும் கூப்பிட வேண்டும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையும் கூப்பிடுங்கள். சர்ச் பாதரையும் கூப்பிடுங்கள். மசூதி இமாமையும் கூப்பிடுங்கள்.

ஒரு மதத்தின் பூஜை முறையை மட்டும் செய்ய இந்த நிகழ்ச்சி கிடையாது. எதற்கு இந்து மதத்தை சார்ந்த பூஜையை மட்டும் செய்கிறீர்கள். இது இந்து ஆட்சி அல்ல. இது திராவிட மாடல் ஆட்சி என ஆவேசமாக அதிகாரியிடம் பேசினார். மேலும் அங்கிருந்த பூஜை பொருட்கள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து அங்கு கடப்பாரை, மண்வெட்டி வைத்து சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன.

இதனிடையே இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்