வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2023-05-09 18:45 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில், அனைத்து துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம், மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா, மாவட்டத்தில் நடைபெற்று வரும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகியன குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருக்கோஷ்டியூர் ஊராட்சியில் பொது சுகாதாரத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளியின் இல்லத்திற்கே நேரடியாக சென்று ஆய்வு செய்தார். பின்னர், அப்பகுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை ஆகியவைகளில் ஆய்வு மேற்கொண்டு, உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு, மருந்துகள் இருப்பு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், எக்ஸ்-ரே பிரிவு, ரத்த பரிசோதனைப்பிரிவு, மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கட்டுமான பணிகள்

முன்னதாக, கீழடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வகுப்பறைகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும், ரூ.5.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணிகள் குறித்தும், முத்துப்பட்டி ஊராட்சியிலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில், பல்வேறு நவீன தொழில்நுட்பத்துடன் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பணிமனையில் நிறுவப்பட்டுள்ள தொழில்நுட்ப உபகரணங்கள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் பிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரத்தினவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) விஜய்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்