சிவகங்கை அருகே கற்கால கல்வட்டம், கருவி கண்ெடடுப்பு
சிவகங்கை நாலுகோட்டை பகுதியில் பெருங்கற்கால கல்வட்டங்கள், கற்பதுக்கை எச்சங்கள், கற்காலக்கருவி ஆகியன கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை மார்ச்.28-
சிவகங்கை நாலுகோட்டை பகுதியில் பெருங்கற்கால கல்வட்டங்கள், கற்பதுக்கை எச்சங்கள், கற்காலக்கருவி ஆகியன கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தொல்நடைக்குழு
சிவகங்கையை அடுத்த நாலுகோட்டையை அருகேயுள்ள அண்ணாநகர் சி-காலனி பகுதியில் பரவலாக கற்கள் காணப்படுவதாக தமராக்கி மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் தேவி சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு தகவல் தெரிவித்தார்.
சிவகங்கை தொல்நடை குழு நிறுவனர் புலவர் காளிராசா, தலைவர். சுந்தரராஜன், செயலர் நரசிம்மன் ஆகியோர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அவை பெருங்கற்கால கல்வட்டங்கள், கற்பதுக்கை எச்சங்கள், கற்காலக்கருவிகள் என தெரிந்தது. இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் காளிராசா கூறியதாவது:-
3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது
நாலுகோட்டை பகுதியை ஒட்டியுள்ள ஓ.புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் சி-காலனி பகுதியில் நாலுகோட்டையில் இருந்து பேரணிபட்டிக்கு செல்லும் சாலையில் வெட்டிக்கினத்தான் மேட்டுப் பகுதியில் கிழக்கே பெரியாறு கால்வாய்க்கு வடக்கு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல்வட்டங்கள் பெரிதும் சிதைவுறாமல் காணப்படுகின்றன.
பெருங்கற்கால காலங்களில் பெரிய, பெரிய கற்களை அடுக்கி வைத்து அதன் உள்பகுதியில் இறந்தவர்களை அல்லது அவர்களது எலும்பு மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உள்ளே வைத்து புதைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. இவை 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். இங்கு காணப்படும் கல்வட்டங்களில் ஒன்றில் மட்டும் இரண்டு அடுக்காக கல்வட்டம் காணப்படுகிறது. இது மற்ற கல்வட்டங்களில் இருந்து வேறுபட்டு இருப்பதால் அப்பகுதியில் வாழ்ந்தவர்களில் தலைமையானவருக்காக எடுக்கப்பட்டதாக இவ்வடுக்கு கல்வட்டத்தை கருத இடம் உண்டு. பெருவாரியான கல்வட்டங்கள் மலைக் கல்லான வெள்ளைக் கல்லிலே இருக்கிறது. ஆனாலும் ஓரிரு இடங்களில் மட்டும் செம்புராங்கல்லினாலான கல்வட்டங்களையும் பார்க்க முடிகிறது.
கற்கால கருவி
இப்பகுதியில் இரும்பு உருக்கு எச்ச கழிவுகளையும், இரும்பு போன்ற கற்களையும் காணமுடிகிறது, 4200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களிடம் இரும்பு பயன்பாடு இருந்ததை ஐங்குன்றம் மயிலாடும்பாறை அகழாய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இப்பகுதியில் கற்கால கருவி ஒன்றும் கிடைத்துள்ளது. இது இரண்டு பக்கங்களிலும் துளை உடையதாக உள்ளது.
மேலும் கருவியின் சுற்றுப்பகுதிகள் நன்கு பயன்படுத்தப்பட்டு தேய்ந்து உள்ளதை காணமுடிகிறது. இக்கருவி சுத்தியல் போல உடைப்பதற்காகவோ, வேட்டை விலங்குகளை நுட்பமாக எறிவதற்காகவோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.