சிவன்- நந்தி சிலைகள் மீட்பு
சுரண்டை அருகே சிவன், நந்தி சிலைகள் மீட்கப்பட்டது.
சுரண்டை:
சுரண்டை அருகே சிவன், நந்தி சிலைகள் மீட்கப்பட்டது.
சிலைகள் மீட்பு
சுரண்டை அருகே துவரங்காடு கிராமத்தில் மாறாந்தை அணைக்கட்டு உள்ளது. இங்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு சிவன் கோவில் இருந்ததாகவும், காலப்போக்கில் வெள்ளப்பெருக்கினால் அழிந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த சிவனடியார்கள் சிலர் நந்தி மற்றும் சிவலிங்கம் கல்சிலைகளை மீட்டு பூஜையில் ஈடுபட்டனர். அதை பார்த்த துவரங்காடு பொதுமக்கள் விசாரித்தபோது, இந்த சிவலிங்க சிலைகளை திருச்சிற்றம்பலம் சிவன் கோவில் வைத்து வழிபட ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் துவரங்காட்டை சேர்ந்த சிவன் பக்தர்கள், சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலேயே வழிபாடு நடத்த வேண்டும் என கூறினர்.
வருவாய் துறையினர்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் வெள்ளைப்பாண்டி மற்றும் சுரண்டை போலீசார், வருவாய் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிவலிங்கம் மற்றும் நந்தி சிலைகளை அதே இடத்தில் வைத்து வழிபாடு நடத்த அறிவுறுத்தியதன் படி சிலைகளை விட்டுச் சென்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து துவரங்காடு பகுதி பொதுமக்கள் சிலைகள் வைக்கப்பட்டு இருக்கும் இடத்திற்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.