மார்பில் 'ஸ்குரு டிரைவர்' குத்திய நிலையில் பூட்டிய வீட்டுக்குள் என்ஜினீயர் பிணமாக மீட்பு; கொலையா? போலீஸ் விசாரணை

மார்பில் ‘ஸ்குரு டிரைவர்’ குத்திய நிலையில் பூட்டிய வீட்டுக்குள் என்ஜினீயர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-06-26 07:15 GMT

கம்ப்யூட்டர் என்ஜினீயர்

சென்னையை அடுத்த காரப்பாக்கத்தில் வசித்து வந்தவர் சுகந்தா ஆச்சார்யா (வயது 34). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 8 வருடங்களாக இந்த வாடகை வீட்டில் தங்கி, சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

பிணமாக கிடந்தார்

கடந்த 2 நாட்களாக அவருடைய பெற்றோர், ஒடிசாவில் இருந்து செல்போனில் சுகந்தாவை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் பலமுறை முயற்சித்தும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், விருகம்பாக்கத்தில் உள்ள உறவினர் ரூபக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ரூபக் குமார் காரப்பாக்கத்தில் உள்ள சுகந்தா வீட்டுக்கு சென்றார். வீட்டின் கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுகந்தா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் இறந்து 2 நாட்கள் ஆகிவிட்டதால் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.

கொலையா?

மேலும் அவரது மார்பு பகுதியில் 'ஸ்குரு டிரைவர்' குத்திய நிலையில் இருந்தது. இது பற்றி தகவல் அறிந்து வந்த கண்ணகி நகர் போலீசார் சுகந்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணிச்சுமை காரணமாக சுகந்தா, 'ஸ்குரு டிரைவரால்' மார்பில் குத்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை 'ஸ்குரு டிரைவரால்' குத்திக்கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்