வீட்டுக்குள் தவறி விழுந்த காட்டெருமை மீட்பு
தேயிலை தோட்டத்தில் இருந்து வீட்டுக்குள் தவறி விழுந்த காட்டெருமை மீட்கப்பட்டது.
கோத்தகிரி,
குன்னூர் அடுத்த கட்டபெட்டு வனச்சரகம் அளக்கரை பிரிவு நடுஹட்டி கிராமத்தை சுற்றி வனப்பகுதி உள்ளது. இந்தநிலையில் நடுஹட்டியில் வீட்டின் பின்புறம் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டெருமை மேய்ந்து கொண்டிருந்தது. திடீரென நிலை தடுமாறிய காட்டெருமை வீட்டிற்கும், தடுப்புச்சுவருக்கும் இடையே தவறி விழுந்தது. இதனால் வெளியே செல்ல வழி இல்லாமல் சிக்கி தவித்தது. இதனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரகர் செல்வகுமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று காட்டெருமையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக காட்டெருமை நடந்து செல்ல ஏதுவாக தடுப்பு சுவரை உடைத்து வழி ஏற்படுத்தினர். இதையடுத்து அந்த வழியாக காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.