கிணற்றில் தவறி விழுந்த காட்டு பன்றி மீட்பு
பெரியகுளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டு பன்றியை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
பெரியகுளம் அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. இவருக்கு அதே பகுதியில் தோட்டம் உள்ளது. நேற்று தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு ராஜேந்திரன் சென்றார். அப்போது தோட்டக் கிணற்றில் காட்டு பன்றி குட்டி ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பெரியகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் முத்துச்செல்வம் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறது நேரம் போராடி, கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றி குட்டியை உயிருடன் மீட்டனர். பின்னர் அதனை வனப்பகுதிக்குள் விட்டனர்.