தேவர்சோலை- முதுமலை எல்லையில் அகழியில் சிக்கித்தவித்த காட்டு யானை குட்டியுடன் மீட்பு

தேவர்சோலை - முதுமலை எல்லையோரம் உள்ள அகழிக்குள் காட்டு யானை மற்றும் குட்டி ஒன்று சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று மீட்டனர்.

Update: 2023-02-20 18:45 GMT

கூடலூர்

தேவர்சோலை - முதுமலை எல்லையோரம் உள்ள அகழிக்குள் காட்டு யானை மற்றும் குட்டி ஒன்று சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று மீட்டனர்.

அகழியை கடந்த யானைகள்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் கரையோரம் கூடலூர் நகராட்சி, ஸ்ரீ மதுரை ஊராட்சி, தேவர்சோலை பேரூராட்சி உள்ளது. முதுமலையில் இருந்து காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் அடிக்கடி வருவதாக எழுந்த புகாரின் பேரில் வனத்துறை சார்பில் எல்லையோரம் அகழிகள் தோண்டப்பட்டுள்ளது.

தற்போது முதுமலை வனத்தில் வறட்சியான காலநிலை தொடங்கியுள்ளதால் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறி விவசாய பயிர்களை தேடி வருவது அதிகரித்து வருகிறது. இதேபோல் நேற்று முன்தினம் இரவு முதுமலையில் இருந்து தேவர்சோலை அருகே செம்பக்கொல்லி பகுதியில் குட்டியுடன் 4 காட்டு யானைகள் அகழியை கடந்து ஊருக்குள் செல்ல முயன்றது.

குட்டியுடன் சிக்கிய தாய் யானை

அப்போது பிறந்து 3 மாதமே ஆன குட்டி யானை, அகழிக்குள் ஓடியது. இதைக் கண்ட தாய் யானை குட்டியை பாதுகாப்பாக அகழிக்குள் இருந்து வெளியே கொண்டு வர முயன்றது. தொடர்ந்து குட்டி யானை அகழிக்குள் திசை மாறி சென்று கொண்டிருந்தது. இதனால் தாய் காட்டு யானை குட்டியின் பின்னால் சென்றது. தொடர்ந்து அகழிக்குள் இருந்து வெளியே வர தாய் யானை பலமுறை முயன்றது.

ஆனால் வெளியே வர முடிய வில்லை. தொடர்ந்து அகழிக்குள் சிக்கித் தவித்தவாறு காட்டு யானைகள் நின்றிருந்தது. இதனால் இரவு முழுவதும் காட்டு யானைகள் பிளிறியவாறு இருந்தது. இதுகுறித்து நேற்று காலை கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து முதுமலை வனச்சரகர் மனோகரன், வனவர் சந்தனராஜ் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

மீட்பு

அப்போது அகழியை சுற்றி 3 யானைகள் நின்றதோடு அகழிக்குள் தாயுடன் குட்டி யானை சிக்கியது தெரியவந்தது. முதலில் அந்த 3 யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதையடுத்து மிகவும் சோர்வாக இருந்த காட்டு யானைகளுக்கு பழங்களை கொடுத்தனர். தொடர்ந்து அகழியை வழக்கமாக கடந்து செல்லும் இடத்துக்கு காட்டு யானையை வனத்துறையினர் விரட்டினர். இதைத்தொடர்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தாய் மற்றும் குட்டி யானைகளை வனத்துறையினர் அகழியில் இருந்து வெளியே செல்லும் வகையில் பாதை அமைத்து மீட்டனர். பின்னர் வனப்பகுதிக்கு காட்டு யானைகள் சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்