வேடசந்தூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த பசு மீட்பு
வேடசந்தூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த பசு மீட்கப்பட்டது.
வேடசந்தூர் அருகே உள்ள விருதலைப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). விவசாயியான இவர், மாடுகள் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் அவரது பசுமாடு ஒன்றை நேற்று முன்தினம் தனது தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அந்த பசுமாடு, தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது.
அந்த கிணற்றில் தண்ணீர் உள்ளதால் பசு நீந்தியபடி போராடியது. இதனை பார்த்த பழனிசாமி உடனடியாக வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, கிணற்றில் விழுந்த பசுமாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.