கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

வடமதுரை அருகே, கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2022-11-28 17:04 GMT

வடமதுரை அருகே உள்ள சங்கர்களம் பகுதியை சேர்ந்தவர் குட்லி என்ற சடையப்பன் (வயது 40), விவசாயி. இவர், பால் வியாபாரமும் செய்து வருகிறார். இவர், தனது தோட்டத்து வீட்டில் 10 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை தோட்டத்தில் இருந்த கிணற்றின் அருகே பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென அந்த பசு கிணற்றுக்குள் தவறி விழுந்தது. சுமார் 50 அடி ஆழம் உடைய அந்த கிணற்றில், 40 அடிக்கு தண்ணீர் இருந்தது. இந்தநிலையில் கிணற்றில் விழுந்த பசு பயத்தில் சத்தமிட்டது. மாட்டின் அலறல் சத்தம் கேட்டு சடையப்பன் குடும்பத்தினர் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது கிணற்று தண்ணீரில் பசு தத்தளித்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அங்கு விரைந்தனர். பின்னர் அவர்கள் கிணற்றில் குதித்து பசுவை பிடித்து கிணற்றுக்குள் உள்ள திட்டில் நிறுத்தி வைத்தனர். இதுபற்றி வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் கிணற்றுக்குள் இறங்கி பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி பசுவை உயிருடன் மீட்டனர். இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்