கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்பு
ஆனைமலை
ஆனைமலை அருகே சுள்ளிமேட்டுபதி பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் தனது வீட்டில் 2 வயது மதிக்கத்தக்க பசுமாட்டை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த பசுமாடு நேற்று அங்குள்ள ஒரு தோட்டத்துக்கு மேய்ச்சலுக்கு சென்றது. அப்போது 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. அதில் 35 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்ததால், தத்தளித்து கொண்டு இருந்தது.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கணபதி தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து பசுமாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கயிறு கட்டி பசுமாட்டை உயிருடன் மீட்டனர். மேலும் திறந்த வெளியில் இருக்கும் அந்த கிணற்றை சுற்றி கம்பி வேலி அமைக்க தோட்ட உரிமையாளருக்கு தீயணைப்பு துறையினர் அறிவுரை வழங்கினர்.