தாராபுரம் அருகே 1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மொபட்டில் கடத்தல்
திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் இசக்கி, கார்த்தி மற்றும் போலீசார் தாராபுரம் பகுதிகளில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும் விற்பனை தொடர்பாக ரோந்துப் பணி மேற்கொண்டனர்.
தாராபுரத்தில் இருந்து மூலனூர் செல்லும் ரோட்டில் ரோந்து பணி மேற்கொண்ட போது மொபட்டில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் மொபட்டில் 150 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
1,050 கிலோ பறிமுதல்
விசாரணையில், அவர் குளத்துப்பாளையம் குலுக்குப்பாளையத்தை சேர்ந்த உமாநாத் (வயது 47) என்பது தெரியவந்தது. மேலும் அவர் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து பின்னர் மொத்தமாக வட மாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும் ரேஷன் அரிசியை ஓரிடத்தில் பதுக்கி வைத்திருந்ததாக கூறினார். அங்கு சென்று 900 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். உமாநாத்திடமிருந்து மொத்தம் 1,050 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மொபட்டை போலீசார் பறிமுதல் செய்து உமாநாத்தை கைது செய்தனர்.