நெல் உலர் களம் அமைக்க கோரிக்கை
ராராமுத்திரகோட்டை கிராமத்தில் நெல் உலர் களம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம், ராராமுத்திரகோட்டை கிராமத்தில் 1,600 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு குறுவை, சம்பா மற்றும் கோடை சாகுபடி என முப்போகம் நெல் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளைவிக்கக்கூடிய நெல்லை உலர்த்த அரசு கொள்முதல் நிலையத்தில் போதுமான இடவசதியோ, உலர் களம் வசதியோ இல்லாததால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை அரசு கொள்முதல் நிலையம் அருகே உள்ள கிராம சாலையில் கொட்டி உலர்த்தி வருகின்றனர்.
உலர் களம் அமைக்கப்படுமா?
சாலையில் நெல்லை கொட்டி உலர்த்துவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே, நெல்லை உலர்த்த உலர் களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறியதாவது:-
ராராமுத்திரகோட்டை பகுதியில் 1,600-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் நெல்லை நன்கு காயவைத்து எடுத்துசென்றால் தான் அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியும். ஆனால், நெல்லை உலர்த்த இப்பகுதியில் போதுமான இடவசதி இல்லை. அதனால், அறுவடை செய்யப்பட்ட நெல்லை வேறு வழியின்றி சாலையில் கொட்டி உலர்த்தி வருகிறோம். ஆகவே, அறுவடை செய்யப்படும் நெல்லை உலர்த்த இப்பகுதியில் நெல் உலர் களம் அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.