கொள்ளிடம் ஆற்றில் மதகுடன் கூடிய தடுப்பணைகள் அமைக்க வேண்டுகோள்

கொள்ளிடம் ஆற்றில் மதகுடன் கூடிய தடுப்பணைகள் அமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-04 19:41 GMT

தா.பழூர்:

தா.பழூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தா.பழூர் ஒன்றிய 9-வது மாநாடு நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் அபிமன்னன் வரவேற்று பேசினார். மாநாட்டிற்கு அரியலூர் மாவட்ட செயலாளர் உலகநாதன் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் ராமநாதன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டு தீர்மானங்களை விளக்கி பேசினார். மாநாட்டில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஒன்றிய செயலாளராக சக்கரவர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளராக தேவசகாயம், பொருளாளராக சண்முகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தா.பழூர் ஒன்றியத்தில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருவதால் தா.பழூர் பகுதியில் நவீன அரிசி ஆலை அமைக்க அரசு முன்வர வேண்டும். டெல்டா பாசன பகுதியாக விளங்கும் தா.பழூர் ஒன்றிய விவசாயிகள் பயனடையும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் மதகுடன் கூடிய தடுப்பணைகள் அமைத்து நீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும். தா.பழூர், விக்கிரமங்கலம் ஆகிய ஊர்களில் தீயணைப்பு நிலையம் தொடங்க வேண்டும். ஸ்ரீபுரந்தான், குணமங்கலம், சுத்தமல்லி, விக்கிரமங்கலம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடி உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு விஷ முறிவு மருந்துகளை எந்நேரமும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி கொள்ளிடத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொறுப்பாளர் சின்னையன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்