பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

பழுதடைந்த முல்லையம்பட்டினம்-கோனையாம்பட்டினம் சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2022-10-19 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே நெப்பத்தூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட முல்லையம்பட்டினம் பகுதியிலிருந்து கோனையாம்பட்டினம் கிராமத்திற்கு செல்ல இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை திருமுல்லைவாசல், திருநகரி, கீழமூவர்கரை, மேல மூவர்கரை, பெருந்தோட்டம், நாயக்கர்குப்பம், தென்னாம்பட்டினம் உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பல கிலோ மீட்டர் கடந்து திருவெண்காடு வழியாக சுற்றி செல்வது தவிர்க்கப்படுகிறது.

இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த சாலை நெடுஞ்சாலை துறைக்கு மாற்றப்பட்டு விட்டது.

பழுதடைந்த சாலை

தற்போது இந்த சாலை போதிய பராமரிப்பின்றி உள்ளதால் மிகவும் பழுதடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளதால் இந்த சாலையின் வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

இதுகுறித்து நெப்பத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அகோர மூர்த்தி கூறுகையில், பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள இந்த சாலை தற்போது மிகவும் சிதலமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ள இந்த சாலையை புதுப்பிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், இந்த வழியாக தினமும் செல்லும் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனை கருத்தில்கொண்டு உடனடியாக நெடுஞ்சாலை துறையினர் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதுவே, இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்