நெகிழி குறித்து விழிப்புணர்வு மாரத்தானில் பங்கேற்க பதிவு செய்ய வேண்டுகோள்
பெரம்பலூரில் 5-ந்தேதி நடைபெறவுள்ள நெகிழி குறித்து விழிப்புணர்வு மாரத்தானில் பங்கேற்க பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு மாரத்தான்
தமிழக முதல்-அமைச்சர் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியின் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நெகிழிக்கு மாற்றாக மஞ்சப்பையை பயன்படுத்தவும், மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி தொடங்கி வைத்தார். இந்த பிரசாரம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் துறைகளின் ஒருங்கிணைப்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருகிற 5-ந்தேதி காலை 7 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் துறையூர் ரோட்டில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகம் வரை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அரியலூர் மற்றும் மாவட்ட நிர்வாகம் பெரம்பலூர் இணைந்து "ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிக்கு எதிரான மக்கள் பிரசாரம்" மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை ஊக்குவிக்கும் வகையில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது.
நேரில் பதிவு செய்யலாம்
மாரத்தானில் பங்கேற்கவுள்ளவர்கள் 4-ந்தேதி மாலை 6 மணி வரை 9080100887 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது plasticfreemarathon perambalur@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ இலவச பதிவு செய்து கொள்ளலாம். 5-ந்தேதி காலை 6 மணி முதல் 6.30 மணி வரை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலும் நேரில் பதிவு செய்யலாம்.
முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்படும். அடுத்த ஏழு வெற்றியாளர்களுக்கு தலா ரூ.500 ரொக்க பரிசு வழங்கப்படும். மேலே குறிப்பிட்டுள்ள பரிசுகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக வழங்கப்படும். நிகழ்வின் முடிவில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.