கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது

Update: 2022-10-09 19:56 GMT

தஞ்சை மாவட்டத்தில் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி பெரிய ஊராட்சியாக விளங்கி வருகிறது. இந்த ஊராட்சியில் மாதாகோட்டை, மறியல், சிலோன் காலனி, அதினாம்பட்டு, கூத்தன் சாரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. மாதாகோட்டை பகுதியில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். மாதாகோட்டை பகுதியில் வங்கி ஊழியர் காலனி, மகாலட்சுமி நகர், வெற்றி நகர், சீதா நகர், மூவேந்தர் நகர், முருகராஜ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள், கடைகள், கால்நடை ஆஸ்பத்திரி ஆகியன அமைந்துள்ளன.

கூடுதல் பஸ் வசதி

இந்தப் பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் மேற்படிப்பிற்காக தஞ்சை நகருக்கு சென்று வருகின்றனர். மேலும் தஞ்சையில் உள்ள கடைகளில் வேலை செய்பவர்கள் மாதா கோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்வதற்கு போதிய அளவில் பஸ் வசதி இல்லாததால் அவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக காலை 8.30 மணிக்கு பஸ்கள் எதுவும் இயக்கப்படாததால் பள்ளி செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆகவே, காலை மற்றும் மாலை நேரங்களில் தஞ்சை பழைய நிலையத்தில் இருந்து மாதாகோட்டைக்கும், மாதாகோட்டையில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கும் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்