சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டுகோள்
சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சவிதா ராஜலிங்கம் பெரம்பலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தாா். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் முன்னேற்ற சங்கம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. சத்துணவு ஊழியர்களுக்கு தற்போது அரசால் வெளியிடப்பட்டுள்ள சமூக நலத்துறையில் பதிவுரு எழுத்தருக்கான அரசாணையை சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம். இதேபோல் அனைத்து துறைகளிலும் இதே அரசாணையை செலுத்தி பதிவுரு எழுத்தருக்கான காலிப்பணியிடங்களை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிரப்பிட அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை அகவிலைப்படியுடன் உயர்த்தி வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும். சத்துணவு ஊழியர்களை பணிவரன் முறை செய்ய வேண்டும். சத்துணவு ஊழியர் நலன் கருதி ஓய்வூதியம் வழங்கிய மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சங்கத்தின் சார்பில் கொண்டாடும் விதமாக மாநாடு நடத்தப்படும். அதில் தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுக்கிறோம், என்றார். அப்போது சங்கத்தின் மாநில செயலாளர்கள் முத்துமாலா, ஷெர்ஷாத், ரவிச்சந்திரன், துணைத்தலைவர் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.