வெலக்கல் நத்தம் ஊராட்சியை இரண்டாக பிரிக்க ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை

15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதால் வெலக்கல்நத்தம் ஊராட்சியை இரண்டாக பிரிக்க வேண்டும் என ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2023-08-22 18:32 GMT

ஜோலார்பேட்டை

15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதால் வெலக்கல்நத்தம் ஊராட்சியை இரண்டாக பிரிக்க வேண்டும் என ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஒன்றியக்குழு கூட்டம்

ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு கூடடம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணவாளன், துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் பாலமுருகன் வரவேற்றார். கூட்டத்தில் அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களும் கலந்துகொண்டு தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

இரண்டாக பிரிக்க வேண்டும்

செந்தில்குமார்:- சின்ன வேப்பம்பட்டு ஊராட்சி இந்திரா நகர் பகுதியில் 550 மீட்டர் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும், ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தி ஒரு வருடத்திற்கு மேலாகிறது. சமுதாயக்கூடம் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாச்சல் மணிகண்டன்:- ஜெய் பீம் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டி 6 மாதங்கள் ஆகியும் சீரமைக்காமல் உள்ளதை சரிசெய்ய வேண்டும்.

வெலக்கல்நத்தம் இளையராஜா:- கடந்த 2019-ம் ஆண்டு வார்டு வரையறை செய்த போது இரண்டு வார்டுகள் ஒரே வார்டாக மாற்றப்பட்டு தற்போது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருவதால் வெலக்கல் நத்தம் ஊராட்சியை பிரித்து இரண்டு ஊராட்சியாக உருவாக்க வேண்டும்.

துணை சுகாதார நிலையம்

மண்டலவாடி கே.ஜி.சரவணன்:- பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருவதால் தற்போது துணை சுகாதார நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் தொகை அடிப்படையில் மேலும் ஒரு துணை சுகாதார நிலையம் ஊராட்சிக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதேபோன்று அனைத்து கவுன்சிலர்களும் தங்களின் ஊராட்சிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் பேசும்போது அனைத்து பணிகளும் நிதி நிலைமைக்கு ஏற்ப நிறைவேற்றப்படும். பொது மக்களின் அடிப்படை வசதிகள், தேவைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்