சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து அகற்ற கோரிக்கை
சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி,
சிவகாசியை ஒட்டிஉள்ள கிராமங்களில் அதிக அளவில் மாடுகள் வளர்க்கப்படுகிறது. ஆனால் இந்த மாடுகளுக்கு போதிய தீவனம் கிடைக்காமல் அதன் உரிமையாளர்கள் தெரு ஓரங்களில் இருக்கும் கழிவுகளை சாப்பிட அனுமதிக்கிறார்கள். இதனால் சிவகாசி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாடுகள் பல்வேறு பகுதியில் உணவுக்காக அலையும் நிலை தொடர்கிறது. அதிலும் குறிப்பாக சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் அதிக அளவில் மாடுகள் கழிவு உணவு பொருட்களை சாப்பிடுவதற்காக வந்து செல்கிறது. இப்படி வந்து செல்லும் மாடுகளால் போக்குவரத்து பிரச்சினை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய சாலைகளில் மாடுகள் கூட்டம், கூட்டமாக செல்லும் நிலை தொடர்கிறது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்வதில் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகிறார்கள். எனவே சாலையில் திரியும் மாடுகளை பிடித்து அகற்ற தேவையான நடவடிக்கையை வருவாய்த்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் சாலையில் திரியும் மாடுகளை பிடித்து வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு இலவசமாக வழங்கினார்கள். அதேபோல் தற்போதும் வழங்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சாலையில் திரியும் மாடுகளால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ந்து சிரமத்துக்கு ஆளாவார்கள்.