வடமதுரையில் பூக்குழி விழா; டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை
வடமதுரை மாரியம்மன் கோவில் பூக்குழி விழாவையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமதுரை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) பூக்குழி இறங்கும் விழா நடைபெற உள்ளது. இதையொட்டி இந்து மக்கள் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் நாகராஜ், மாவட்ட செயலாளர் மருதமுத்து தலைமையில் அக்கட்சியினர் வடமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், வடமதுரையில் பூக்குழி விழா அன்று நகரில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். பூக்குழி இறங்க வரும் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகளை செய்துதர வேண்டும். குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு தனி வரிசை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.