அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு நிதயுதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2022-11-20 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

தமிழக அரசு நிதயுதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டம் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாநிலபொதுச்செயலாளர் தாயப்பன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் கோட்டை சண்முகநாதன், பன்னீர்செல்வம், கிரிதரன், ஜெபஸ் பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் சண்முகவேல் வரவேற்றார். கூட்டத்தில், மாநில தலைவர் தேவராஜன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில், அரசு பள்ளிகளுக்கு நிகராக அரசின் நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கும் அனைத்து வகையான சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களையும், ஏற்கனவே நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்களையும் உடனே நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். நீட் தேர்வில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளிமாணவர்களுக்கு வழங்கியுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில், மாநில துணை செயலாளர்கள் பழனிமுருசேன், பத்மநாபன், மாவட்ட தலைவர்கள் பழனிமுருகேசன், பத்மநாபன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முத்துசிவன் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். பாஸ்கரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்