குளத்தில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை
குளத்தில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் உச்சுவாடி பொன்னியம்மன் கோவிலில் இருந்து கீழ உச்சுவாடி செல்லும் சாலையின் இடையே உள்ளது, பிள்ளையார் குளம். இந்த குளத்தினை உச்சுவாடி பொன்னியம்மன் கோவில் தெரு, நேதாஜி தெரு, மேலத்தெரு, கீழத்தெரு, வடக்கு தெரு, கீழ உச்சுவாடி உள்ளிட்ட கிராமமக்கள் மற்றும் அப்பகுதியில் விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது இந்த குளத்தில் ஆகாய தாமரைகள் அதிகளவு வளர்ந்து குளமே தெரியாத அளவுக்கு படர்ந்துள்ளது. இதனால், பெரும்பாலான தண்ணீரை ஆகாய தாமரைகள் உறிஞ்சி விடுகின்றன.
அகற்றப்படுமா?
இதனை அப்பகுதி மக்கள் குளத்தில் இறங்கி அகற்றினாலும் மீண்டும் வளர்ந்து விடுகிறது. இதன் காரணமாக விவசாய பணிகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. ஆகவே, இந்த குளத்தில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றி குளத்தை சுத்தப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.