விளாத்திகுளம் பகுதி விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்க கோரிக்கை

விளாத்திகுளம் பகுதி விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-05 18:45 GMT

விளாத்திகுளம் பகுதியில் மழையால் மிளகாய் பயிர்கள் அழுகி விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பா.புவிராஜ் தலைமையில் கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், 2020-2021-ம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக அனைத்து பயிர்களும் சேதமடைந்த நிலையில் பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் நடத்திய போராட்டம் காரணமாக ராபி பருவ வேளாண் பயிர்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் தோட்டக்கலை பயிரான மிளகாய் பயிருக்கு நீண்ட இழுபறிக்குப்பின் தற்போது விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பயிர் காப்பீடு வழங்க வேண்டும்

விளாத்திகுளம் வட்டத்தில் புதூர், காடல்குடி வருவாய் கிராமங்களுக்கு மட்டுமே இதுவரை காப்பீடு தொகை விடுவிக்கப்பட்டு உள்ளது. விளாத்திகுளம், வேம்பார், குளத்தூர், சிவஞானபுரம் உள்ளிட்ட விளாத்திகுளம் ஒன்றியம் முழுவதும் உள்ள பெரும்பாலான விவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்கப்பெறாமல் முழுமையாக விடுபட்டு உள்ளது. அதிகமாக மிளகாய் பயிரிடும் பகுதிகளை திட்டமிட்டு புறக்கணித்திருப்பதாக விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.

எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு விளாத்திகுளம் ஒன்றிய பகுதி விவசாயிகளுக்கு விடுப்பட்ட மிளகாய் பயிருக்கு பயிர் காப்பீடு தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சராசரி என்ற பெயரில் விவசாயிகளை வஞ்சிக்காமல் மிளகாய் பயிரிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் 2020-2021 பயிர் காப்பீட்டு திட்ட இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தண்ணீர்

தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிவஞானபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் ஊர்த்தலைவர் கே.பாலையா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், சிவஞானபுரம் கிராமத்தில் மருதாணி குட்டம் என்ற பாசன குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி உள்ள பகுதிகளில் விவசாயிகள் வாழை, மஞ்சள், நெல், தென்னை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த குளத்தின் தண்ணீரை, குளத்தை சுற்றியுள்ள விவசாயிகளின் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும் என கிராம பஞ்சாயத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை மீறி தனிநபர் ஒருவர் மருதாணி குட்டம் குளத்தில் இருந்து விவசாய தேவைக்காக சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் குழாய் பதித்து தண்ணீர் எடுப்பதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆகையால் மருதாணிகுட்டம் குளத்தில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுத்து செல்வதை தடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்