மேம்பாலம் அமைக்கக் கோரி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்

வாணியம்பாடி அருகே மேம்பாலம் அமைக்கக் கோரி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-23 18:20 GMT

வாணியம்பாடி அருகே மேம்பாலம் அமைக்கக் கோரி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொழிற்சாலைகளுக்கும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காலை மற்றும் மாலை நேரங்களில் செல்கின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு உயிர்ச் சேதம் ஏற்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 15-க்கும் மேற்பட்டோர் விபத்துகளில் சிக்கி உயிர் இழந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேம்பாலம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார், தாசில்தார் சம்பத் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மேம்பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மறியல் போராட்டம் காரணமாக பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்