பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பஸ்கள் இயக்க வேண்டும்

காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சருக்கு ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-11-30 18:45 GMT

காரைக்குடி,

காரைக்குடி புறவழிச்சாலையில் அமைந்துள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பொதுமக்கள் சென்று வரும் வகையில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சருக்கு ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசு பஸ் வசதி

காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் தேவிமீனாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் தலைமை செயலருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:- காரைக்குடி வழியாக திருச்சி செல்லும் புறவழிச்சாலையில் புதிதாக பத்திரப்பதிவு அலுவலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு காரைக்குடி நகர் பகுதியில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது.

தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் பத்திரப்பதிவு சம்பந்தமான பணிகளுக்கு தங்களது சொந்த வாகனம் மற்றும் வாடகை வாகனத்தில் சென்று வருகின்றனர். வாடகை வாகனத்தில் சென்று வர வேண்டுமானால் ரூ.200 முதல் 400 வரை கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் புறவழிச்சாலையில் இந்த அலுவலகம் அமைந்துள்ளதாலும், போக்குவரத்து வசதி இல்லாததால் ஏழை, எளிய மக்கள் சென்று வர பல்வேறு சிரமங்கள் உள்ளது.

பயணியர் நிழற்குடை

காரைக்குடி நகரில் இருந்து ஒ.சிறுவயல் வரை ஏற்கனவே அரசு டவுண் பஸ்கள் சென்று வருவதால் இந்த அரசு பஸ்கள் பத்திர அலுவலகம் உள்ள பகுதி வரையில் சென்று வருகிறது. ஆனால் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்வதில்லை. எனவே காரைக்குடி பகுதி பொதுமக்களின் நலன் கருதி இந்த வழியில் செல்லும் அரசு டவுண் பஸ்களை பத்திரப்பதிவு அலுவலகம் வரை சென்று வரும்படி உத்தரவு வழங்கி அதற்கான தொடக்க விழாவும் நடத்த வேண்டும்.

மேலும் அலுவலகம் முன்பு பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும். பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு பைபாஸ் சாலையில் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு ஏராளமான உயிர்பலி சம்பவமும் ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு கார் பார்க்கிங் வசதியும் செய்து தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்