ஊதியம் பெறாமல் தவிக்கும் ஆசிரியர்கள்

இணையதள குளறுபடி காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊதியம் பெறாமல் தவிக்கும் ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-11-10 18:45 GMT

இணையதள குளறுபடி காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊதியம் பெறாமல் தவிக்கும் ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது:- தமிழக அரசு காகித பயன்பாட்டை தவிர்க்கவும், விரைவான சேவை வழங்கும் நோக்கிலும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் (IFHRMS) இணையதளம் மூலம் ஊதியம் மற்றும் பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை நிறுவிய தனியார் நிறுவனம் அடிப்படை ஊழியர்களுக்கு முறையான பயிற்சியை வழங்கவில்லை. இதனால் தொழில்நுட்ப கோளாறு ஏற்படும்போது அதை சரிசெய்ய அலுவலக பணியாளர்களால் இயலவில்லை.

இணையதள மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கல்லல் ஒன்றியத்தில் உள்ள இரண்டு ஆசிரியர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

உரிய நடவடிக்கை

கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்த 2 பள்ளிகளிலும் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் சிவகங்கை ஒன்றியத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. இதனால் கல்லல் ஒன்றிய பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை அதிகாரிகள் இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால் அவர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. நிர்வாக ரீதியில் அதிகாரிகளால் ஏற்பட்ட குளறுபடிக்கு ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் கருவூலக அலுவலர்களிடம் முறையிட்டதற்கு சென்னை இயக்குனர் அலுவலகம்தான் சரி செய்து தரவேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்கிறார்கள். இந்த குளறுபடியை சரிசெய்து உடனடியாக ஊதியம் வழங்க வேண்டுமென தொடக்கக்கல்வி இயக்குனரிடம் நேரடியாக முறையிட்டுள்ளோம். மேலும் பல லட்சம் செலவழித்து உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் குறித்து முழுமையான பயிற்சியை அனைத்து அலுவலக பணியாளர்களுக்கும் வழங்கி ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்களை உரிய தேதியில் வழங்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்