கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் குடியரசு தின விழா கோலாகலம்

நெல்லையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றினார்.

Update: 2023-01-26 20:47 GMT

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்

மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். காலை 8.10 மணிக்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் திறந்த ஜீப்பில் சென்று, போலீசார், தீயணைப்பு படையினர், தேசிய மாணவர் படையினர், ஊர்க்காவல் படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று பார்வையிட்டார். அதன்பின்னர் மூவர்ண பலூன்களை பறக்க விட்டார்.

பின்னர் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 100 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது. மாநகரில் சிறப்பாக பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகராஜ், பாலமுருகன், சுப்பிரமணியன் உள்ளிட்டவர்களுக்கு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது.

243 பேருக்கு பாராட்டு சான்றிதழ் 

தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர்ஆலம், பயிற்சி உதவி கலெக்டர் கோகுல், மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையம்) சுகன்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் சாந்தி, மரபு சாரா எரிசக்தி ஆதாரங்கள் மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், நெல்லை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி, மேலப்பாளையம் மண்டல உதவி செயற்பொறியாளர் ராமசாமி, மாநகராட்சி மைய அலுவலக இளநிலை பொறியாளர் ராமநாதன், சுகாதார அலுவலர் இளங்கோ, தாமிரபரணி வடிநில கோட்ட இளம்பொறியாளர் மாரியப்பன், வேளாண்மை துணை இயக்குனர் (நுண்ணீர் பாசன திட்டம்) அசோக்குமார், நெல்லை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அருள்அருணா, உதவி இயக்குனர் டெலின்ஸ், மாற்றுத்திறனாயிகள் நலத்துறை சார்பில் முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன், ரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவு துறை தலைவர் டாக்டர் ஷர்மிளா, உடல் இயங்கியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் சுஜாதா ஆண்ட்ரூ, உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் உதயசிங், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் சசிதீபா, உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம், நெல்லை ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், முன்னீர்பள்ளம் சப்-இன்ஸ்பெக்டர் துரை, தீயணைப்பு துறையை சேர்ந்த அமல்ராஜ், முனியராஜ் காந்தி, சோலைமுடிபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த மொத்தம் 243 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.

தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் படைவீரர்கள் நலத்துறையில் 2 பேர், மாவட்ட தொழில்மையம் சார்பில் 2 பேர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 1 நபர், வேளாண்மை உழவர்நலத்துறை சார்பில் 3 பேர், தோட்டக்கலைத்துறை சார்பில் 4 பேர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பேர், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் 5 பேர் என மொத்தம் 19 பேருக்கு ரூ.10 லட்சத்து 45 ஆயிரத்து 247 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கலை நிகழ்ச்சிகள்

தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மீனாட்சிபுரம் மற்றும் பர்கிட் மாநகரம் பள்ளியை சேர்ந்த மாணவர்களின் செவ்வியல் நடனம் நடந்தது. தொடர்ந்து பேட்டை ராணி அண்ணா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டவுன் ஜவகர் அரசு உயர்நிலைப்பள்ளி, கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கும்மி நடனம் நடந்தது. பர்கிட் மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் கணியான் கூத்து மற்றும் பறை ஆட்டம் நடந்தது. தொடர்ந்து மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டுப்புற நடனமும், கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சார்பில் மேற்கத்திய நடனம், டவுன் ஜவகர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் செண்டை மேளம் இசைக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக நடமாடும் உணவு பகுப்பாய்வகம் எனப்படும் வாகனம் மற்றும் காணி பழங்குடியினரின் மிளகு, தேன், காந்தாரி மிளகாய் போன்ற விளைபொருட்களை வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய உதவும் வகையில் விற்பனை வாகனத்தையும் மாவட்ட கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர்ஆலம், பயிற்சி துணை கலெக்டர் கோகுல், துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணக்குமார், அனிதா, வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை) சுகன்யா, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் மாவட்ட கலெக்டருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்