கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் குடியரசு தின விழா

தென்காசியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தேசிய கொடி ஏற்றினார். கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

Update: 2023-01-26 18:45 GMT

தென்காசியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தேசிய கொடி ஏற்றினார். கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

கலெக்டர் கொடியேற்றினார்

தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் இ.சி.ஈ. அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஆகாஷ் காலை 8-05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக விழாவுக்கு வந்த அவரை மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தேசிய கொடியை ஏற்றிய பிறகு போலீஸ் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதனை திறந்த ஜீப்பில் சென்று கலெக்டர் ஆகாஷ், போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். பின்னர் இருவரும் சமாதான புறாக்களை பறக்க விட்டனர். சுதந்திர போராட்ட தியாகி லட்சுமிகாந்தன் பாரதி மற்றும் சாவடி சொக்கலிங்கம் பிள்ளையின் வாரிசுதாரர் முத்தம்மாள் ஆகியோருக்கு கலெக்டர் ஆகாஷ் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

இதைத்தொடர்ந்து அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.54,790 மதிப்பிலும், தோட்டக்கலை துறை சார்பில் 5 பேருக்கு ரூ.43 ஆயிரம் மதிப்பிலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 3 பேருக்கு ரூ.3,000 மதிப்பிலும், வேளாண்மை துறை சார்பில் 2 பேருக்கு ரூ.1 லட்சத்து 120 மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.13 ஆயிரத்து 500 மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நற்சான்றிதழ்கள்

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 20 பேருக்கும், தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் 5 பேருக்கும், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் 7 பேருக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் 2 பேருக்கும், கருவூலம் மற்றும் கணக்கு துறை அலுவலகத்தில் 5 பேருக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பட்டு வளர்ச்சி துறையினர் 5 பேருக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் 6 பேருக்கும், மாவட்ட நில அளவை அலுவலகத்தில் 3 பேருக்கும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் 3 பேருக்கும், நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறையில் ஒருவருக்கும், கூட்டுறவுத் துறையில் 2 பேருக்கும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 6 பேருக்கும், மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் 5 பேருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

கலைநிகழ்ச்சிகள்

தொழில் வணிகத் துறையில் 3 பேருக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவையில் 2 பேருக்கும், தோட்டக்கலை துறையில் 7 பேருக்கும், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் 5 பேருக்கும், கால்நடை பராமரிப்பு துறையில் 5 பேருக்கும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் 2 பேருக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 4 பேருக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் 11 பேருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 24 பேருக்கும், வேளாண் அறிவியல் மையத்தில் 2 பேருக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையில் 16 பேருக்கும், பள்ளி கல்வித்துறையில் 14 பேருக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 5 பேருக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையில் 2 பேருக்கும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறந்த 2 மருத்துவ மனைகளுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 73 பேருக்கும், தன்னார்வலர்கள் 10 பேருக்கும் ஆக மொத்தம் 257 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் பழனி நாடார் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் முத்து மாதவன், கனகம்மாள் (வேளாண்மை), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் முரளி சங்கர், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, தென்காசி தாசில்தார் ஆதிநாராயணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்