இன்று குடியரசு தின விழா: சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் தேசிய கொடி ஏற்றுகிறார்

குடியரசு தின விழாவை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னை மெரினா கடற்கரையில் தேசிய கொடி ஏற்றுகிறார்.

Update: 2023-01-26 00:10 GMT

சென்னை,

நாட்டின் குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில், குடியரசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதி சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு தமிழக கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா, மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற உள்ளது.

எனவே பாதுகாப்பு காரணங்களால் 25 (நேற்று) மற்றும் 26-ந் தேதி (இன்று) முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

முழு அளவில் விழா

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு குடியரசு தினத்தை வெகு விமரிசையாக முழு அளவில் கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

காலை 7.52 மணிக்கு விழா பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவார். அவரின் காரின் முன்னும்பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்படுவார்.

கொடி ஏற்றம்

காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் வருவார். அதைத்தொடர்ந்து 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்பார்.

பின்னர் அதிகாரிகளை கவர்னருக்கு சம்பிரதாயப்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைப்பார்.

அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசிய கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைப்பார். அப்போது அந்த பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவும்.

அணிவகுப்பு மரியாதை

பின்னர் ராணுவ படை பிரிவு, கடற்படை பிரிவு, ராணுவ கூட்டுக்குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்துவார்கள். அதை அவர் ஏற்றுக்கொள்வார். அப்போது, கடற்படை ஊர்தியில் போர்க்கப்பலின் சிறிய வடிவம், வான்படை ஊர்தியில் சிறிய வடிவிலான விமானம், கடலோர காவல்படை ஊர்தியில் சிறிய வடிவிலான படகுகள் ஆகியவை அணி வகுத்து கொண்டுவரப்படும்.

அதைத்தொடர்ந்து 30 படைப்பிரிவினர் அணி வகுத்து செல்வார்கள்.

பதக்கங்கள்

அதன்பின்னர் அணி வகுப்பு மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்குவார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சருடன் பதக்கம் பெற்றவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

அதைத்தொடர்ந்து விழா மேடையில் கவர்னர், முதல்-அமைச்சர் அமர்ந்திருக்க, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்