முந்திரி உற்பத்தியை பார்வையிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாட்டு பிரதிநிதிகள்

பண்ருட்டி பகுதியில் முந்திரி உற்பத்தியை மேற்கு ஆப்பிரிக்க நாட்டு பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

Update: 2023-01-08 18:45 GMT

பண்ருட்டி, 

இந்தியாவிற்கு தேவையான முந்திரி கொட்டைகளை இறக்குமதி செய்யும் மேற்கு ஆப்பிரிக்கா நாட்டின் கினிசிபாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, முந்திரி வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் அந்த நாட்டை சேர்ந்த அரசு பிரதிநிதிகள் மற்றும் வேளாண் குழுவினர் அரசு முறை பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் முந்திரி உற்பத்தி செய்யப்படும் இடங்களை பார்வையிடுவதற்காக பண்ருட்டிக்கு வந்தனர். அப்போது அங்கு தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்துடன் முந்திரி ஏற்றுமதி, இறக்குமதி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் மலர்வாசகம் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.

இதில் முந்திரி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கினிபிசாவின் வேளாண்குழுவினர், அரசு பிரதிநிதிகளிடம், அந்நாட்டில் இருந்து முந்திரி கொட்டைகளை அதிக அளவு இறக்குமதி செய்வது, அதற்கான வழிமுறைகள் குறித்தும், இறக்குமதியை அதிகரிக்க எளிமையான நடைமுறைகள் பற்றியும், முந்திரி கொட்டைகளை இறக்குமதி செய்வதில் உள்ள இடர்பாடுகளையும், அதனை எவ்வாறு களைவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

டிரோன் மூலம் மருந்து தெளிப்பு

தொடர்ந்து கினிசிபாவில் இருந்து வந்த பிரதிநிதிகள், பாலூரில் இயங்கி வரும் வேளாண் ஆராய்ச்சி பண்ணையை பார்வையிட்டனர். அப்போது அவர்களுக்கு ஒருங்கிணைந்த முந்திரி சாகுபடி மற்றும் ஒட்டுக்கன்று உற்பத்தி பதப்படுத்துதல், காய்கறி உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்தும், டிரோன் மூலம் பழத்தோட்டங்களுக்கு மருந்து தெளிப்பது குறித்தும் காய்கறி ஆராய்ச்சி நிலைய தலைவர் அனிசா ராணி, இணைப்பேராசிரியர் விஜயகீதா ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

இதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் ரவிகுமார் தியோடர், உலக வங்கி இந்திய பிரதிநிதி ஹிம்மத் படேல் ஆகியோர் செய்திருந்தனர்.

கண்காட்சி

அப்போது திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவியர் காய்கறி கண்காட்சியை அமைத்து சிறப்பாக விளக்கமளித்தனர். இதேபோல் விருத்தாசலத்தில் உள்ள வேளாண் ஆராய்ச்சி பண்ணை மற்றும் காடாம்புலியூரில் உள்ள முந்திரி தொழிற்சாலைகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்