சைபர் கிரைம் போலீசில் புகார்

‘ஆடிக்கிருத்திகை அர்ச்சனை' தொடர்பாக, பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

Update: 2023-08-05 16:21 GMT

பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கிருத்திகை (கார்த்திகை) உற்சவ விழா நடந்து வருகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். மேலும் அன்றைய தினம் மலைக்கோவிலில் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். அதன்படி இந்த மாத (ஆடி) கிருத்திகை உற்சவம் வருகிற 9-ந்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஆடி கிருத்திகையன்று பழனி முருகன் கோவிலில் போன் மூலம் அர்ச்சனை செய்யலாம் என வாட்ஸ்அப்பில் தகவல் ஒன்று பரவுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, இது பொய்யான தகவல் என தெரியவந்தது.

இதுதொடர்பாக பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், பழனி கோவில் அர்ச்சகர் உங்களின் பெயர், நட்சத்திரம் கேட்பார். அதை சொன்னவுடன் 'ஆடி கிருத்திகை சிறப்பு அர்ச்சனை செய்யப்படும். அதன்படி ஆடி கிருத்திகையில் ஒரு கோடி அர்ச்சனை செய்யப்பட உள்ளது' என்ற தகவல் பரவுகிறது. கோவில் நிர்வாகம் சார்பில் ஆடி கிருத்திகை அன்று தொலைபேசி மூலம் சிறப்பு அர்ச்சனை செய்ய ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. எனவே பக்தர்கள், பொதுமக்கள் பொய் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். பழனி முருகன் கோவில் குறித்து வாட்ஸ்அப்பில் பொய்யான தகவல் பரப்புவோர் மீது சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்