4,200 மீட்டர் தூரத்திற்கு குடிநீர் குழாய்கள் மாற்றம்

ராசிசெட்டிபாளையம் பிரிவு முதல் ஜமீன்முத்தூர் வரை 4,200 மீட்டர் தூரத்திற்கு குடிநீர் குழாய்கள் மாற்றப்பட உள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-03-17 18:45 GMT

பொள்ளாச்சி

ராசிசெட்டிபாளையம் பிரிவு முதல் ஜமீன்முத்தூர் வரை 4,200 மீட்டர் தூரத்திற்கு குடிநீர் குழாய்கள் மாற்றப்பட உள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடிநீர் குழாய் மாற்றம்

பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் ஆழியாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீருக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக அம்பராம்பாளையத்தில் இருந்து ராசிசெட்டிபாளையம் வழியாக பாலக்காடு ரோட்டில் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் கோபாலபுரம் வரை ரூ.70 கோடியில் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பணிகள் கிட்டதட்ட முடிவடைந்து சாலையோரத்தில் கிராமங்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

நிதி ஒதுக்கீடு

ஆனால் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளதால் கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் சாலையின் நடுப்பகுதிக்கு சென்று விட்டது. இதனால் குழாய்களில் ஏதாவது கசிவு ஏற்பட்டால் சீரமைப்பதில் சிக்கல் ஏற்படும் மேலும் சாலை மீண்டும் சேதமாகும் என்பதால் சாலையோரத்தில் புதிதாக இரும்பு குழாய்கள் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஆங்காங்கே கிராமங்களில் சாலையோரங்களில் இரும்பு குழாய்கள் போடப்பட்டு உள்ளன.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் கான்கீரிட் குடிநீர் குழாய்கள் செல்கிறது. தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளதால், குழாய்கள் சாலையின் நடுப்பகுதிக்கு சென்று விட்டது. இதன் காரணமாக புதிதாக இரும்பு குழாய்கள் சாலையோரத்தில் பதிக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

4,200 மீட்டர் தூரம்

ராசிசெட்டிபாளையம் பிரிவு முதல் ஜமீன்முத்தூர் வரை 4,200 மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்கப்படுகிறது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், கிணத்துக்கடவு ஒன்றியங்களுக்கு உட்பட்ட 135 கிராமங்களுக்கு செல்லும் குழாய்களை மாற்ற வேண்டிய உள்ளது. சாலையோரத்தில் குழாய்களை பதிப்பதால் கசிவு ஏற்பட்டால் சாலையை தோண்டி சீரமைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கிடைத்ததும் பணிகளை தொடங்கி, ஒரு மாத காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே மண்ணூர், ராமபட்டிணம் கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாய் 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு மாற்ற வேண்டி உள்ளது. இதில் 10 கிலோ மீட்டர் தூர பணிகள் முடிவடைந்து விட்டன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்