வீடு, வாகன கடன் தவணைத்தொகை அதிகரிப்பு: மக்களுக்கு பேரிடியை தரும் 'ரெப்போ' வட்டி விகித உயர்வு-'பெரும் சுமை' என கருத்து

Update: 2023-02-09 18:45 GMT

ஏழை-எளிய நடுத்தர மக்கள் வங்கிகளின் கடன் தவணைத்தொகை மூலமாகவே வீடு, வாகனம் வாங்கும் ஆசையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

மாத சம்பளத்தில் பெரும்பாலான தொகையை இதற்கான பட்ஜெட்டுக்காக ஒதுக்குகின்றனர். இப்படி பட்ஜெட் போட்டு ஆசை வாழ்க்கையை வாழும் பலருக்கு ரிசர்வ் வங்கியின் தொடர் ரெப்போ வட்டி விகித உயர்வு பேரிடியாக அமைந்திருக்கிறது.

'ரெப்போ' என்பது ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை பயன்படுத்துகிறது. இந்தியாவின் பணக்கொள்கையை முடிவு செய்யும் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கைக்குழு தான் இந்த ரெப்போ வட்டி விகிதத்தை முடிவு செய்து வருகிறது. அந்தவகையில் 6 பேர் கொண்ட இந்த குழு 2 மாதங்களுக்கு ஒரு முறை கூடி தனது பணக்கொள்கையை புதுப்பித்துக்கொள்ளும்.

அதன்படி, இந்த குழுவின் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் குழுவின் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில், தற்போது 0.25 சதவீதம் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்திருக்கிறது. இதன் மூலம் தற்போது ரெப்போ வட்டி வகிதம் 6.50 சதவீதம் என்ற நிலைக்கு வந்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 5.75 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம், கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 4 சதவீதத்துக்கு வந்தது. இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்திருந்தது.

அதன் பின்னர், கொரோனா தொற்றால் ஏற்பட்ட பணவீக்கத்தை சமாளிக்க, ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தின் பக்கம் கவனத்தை திருப்பியது. இதன் தொடர்ச்சியாக ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்க தொடங்கியது.

தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து, தற்போது 6.50 சதவீதத்துக்கு வந்துள்ளது. வட்டி விகித உயர்வால், ஏனைய வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீடு, வாகன கடன்கள் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் தவணைத் தொகை செலுத்த நேரிடும்.

உதாரணமாக 20 ஆண்டுகளுக்கு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் தவணைத் தொகையில் வாங்கி இருக்கும் தனி நபரின், தவணைத்தொகை குறைந்தது ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரம் வரை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் இழந்து தவித்து, மெல்ல மெல்ல மீண்டு வரும் மக்களுக்கு வீடு, வாகனம் கடன் தவணைத்தொகை உயருவது பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இதுகுறித்து பொது மக்கள், பொருளாதார ஆலோசகர், வங்கி ஊழியர் சங்கம், சிறு, குறு தொழில் சங்கம் தரப்பில் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் வருமாறு:-

பொருளாதார ஆலோசகர் சோம.வள்ளியப்பன்:-

'பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவதாக சொல்கிறார்கள். இந்த நடவடிக்கையால் ஓரளவுக்கு பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்களில் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் ரெப்போ வட்டி உயர்வு கடன் வாங்கியவர்களுக்கு சிரமத்தை கொடுக்கும். ஒரு காலாண்டு காலத்துக்கு பொறுத்து இருந்து நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்றால், வட்டி விகிதத்தை உயர்த்தியிருக்கலாம். இடைப்பட்ட காலத்துக்குள் 6 முறை உயர்வு என்பது, வங்கியாக இருக்கட்டும், தனிநபராக இருக்கட்டும் அவர்களுடைய நிர்வாக கணக்குகளை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். எனவே இதே போக்கு நீடிக்காமல் இருப்பதுதான் சரியாக இருக்கும்.

தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்க தலைவர் கே.மாரியப்பன்:- தொடர் ரெப்போ வட்டி உயர்வால் வங்கிகளில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருந்த வட்டி விகிதமான 6.25 சதவீதத்தில் இருந்து 9.75 சதவீதமாக தற்போது உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு தட்டுத்தடுமாறி, மீண்டும் வங்கி கடன்களின் உதவியுடன் தொழில்களை நடத்துவதற்கு சிரமப்பட்டு வரும் சூழ்நிலையில், 2.50 சதவீதம் கூடுதல் வட்டி என்பது 'குருவி தலையில் பனங்காய்' வைத்தது போல் ஆகிவிடும். திடீர் திடீரென்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நிலையான கொள்கை முடிவு எடுக்காமல், ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருவது மிகவும் மோசமான நடவடிக்கை. கடன் வழங்கும்போது என்ன வட்டி விகிதத்தில் ஒப்பந்தம் போடப்படுகிறதோ, அந்த கடனை திருப்பி செலுத்தும் காலம் முழுவதற்கும் அதே வட்டி விகிதத்தில் வசூலிக்க வேண்டும். அப்போதுதான் சிரமம் இல்லாமல் இருக்கும்.

தர்மபுரி ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பவுத்த பெருமாள்:-

ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் பெறும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. இதனால் வங்கிகள் ஏற்கனவே வழங்கியுள்ள வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன் ஆகியவற்றிற்கான வட்டியை உடனடியாக உயர்த்த வாய்ப்பு உள்ளது. இதேபோல் வங்கிகளில் புதிதாக வீட்டு கடன், வாகன கடன் பெறுபவர்கள் கூடுதல் வட்டியை இந்த கடன்களுக்கு செலுத்த வேண்டிய நிலை உருவாகும். வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி உயர்ந்தாலும், வங்கிகளில் வைப்புத்தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்களுக்கு அதே விகிதத்தில் வட்டி உயர்வு உடனடியாக வழங்கப்படுவதில்லை. வைப்புத்தொகைகள் வைத்திருப்பவர்களுக்கு கால சூழலுக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக வட்டி விகிதத்தை சற்று அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ரிசர்வ் வங்கியின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி உயர்வு அட்டவணையிடப்பட்ட வணிக வங்கிகளுக்கு லாபத்தை ஏற்படுத்தும். வங்கிகளில் கடன் பெற்றவர்கள் கூடுதல் வட்டி சுமையால் பாதிக்கப்படுவார்கள்.

தர்மபுரி அரசு போக்குவரத்து கழக ஊழியர் நாகராசன்:-

நான் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வீட்டு கடன் பெற்று பல்வேறு தவணைகளாக கடன் தொகையை திருப்பி செலுத்தி வருகிறேன். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரெப்போ வட்டி விகிதம் அமலுக்கு வந்தால் நான் கூடுதலாக ரூ.1 லட்சம் வரை வட்டி செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். இது கண்டிப்பாக எங்கள் குடும்ப பட்ஜெட்டை பாதிக்கும். கடன்களுக்கான ரெப்போ வட்டி குறைக்கப்படும்போது வங்கிகள் கடன் பெற்றவர்களுக்கு அந்த வட்டி குறைப்பு விகிதத்தை உடனடியாக வழங்குவதில்லை. கடன் பெற்றவர்கள் வங்கிகளுக்கு சென்று விண்ணப்பித்தால் மட்டுமே வட்டி குறைப்பு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் ரெப்போ வட்டி உயர்ந்தால் கடன் வாங்கிய அனைவருக்கும் வட்டி உயர்வு விரைவாக அமல்படுத்தப்பட்டு விடுகிறது. விலைவாசி உயர்வால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள ஏழை, நடுத்தர மக்களுக்கு இந்த வட்டி உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏரியூர் குடும்பத்தலைவி கவிதா:-

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி இருப்பதால் வங்கிகளில் வீட்டு கடன், வாகன கடன்களுக்கு வட்டி அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். இத்தகைய கடன்களுக்கு வங்கிகளில் ஏற்கனவே வட்டி தொகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் திடீரென கூடுதலாக வட்டி விகிதத்தை உயர்த்துவது ஏற்புடையது அல்ல. இதனால் வீட்டு கடன் மற்றும் வாகன கடன் பெற்ற ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் திடீரென ஏற்படும் கூடுதல் கடன் சுமையால் கடும் பாதிப்புக்கு தள்ளப்படுவார்கள்.

வெல்லூர் விவசாயி ரத்தினம்:-

நான் வீடு கட்டுவதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய கடனை செலுத்தி வருகிறேன். இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் உயர்வு காரணமாக வங்கிகளில் வீட்டு கடனுக்கான வட்டி அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகி இருப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தவணை காலத்தை விட கூடுதல் காலத்தில் கூடுதல் வட்டியை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சாதாரண மக்களின் வருவாய் அதிகரிக்கவில்லை. எனவே வங்கிகளில் கடனை பெற்று முறையாக செலுத்தும் சாமானிய மக்களுக்கு சலுகைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக மேலும் கடன் சுமையை ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்