ரேஷன் கடையில் பயோமெட்ரிக் எந்திரம் பழுது; பொதுமக்கள் மறியல்

ரேஷன் கடையில் பயோமெட்ரிக் எந்திரம் பழுதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-14 18:32 GMT

பொருட்கள் வாங்க வந்தனர்

பெரம்பலூர் மாவட்டம், தம்பிரான்பட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் நேற்று காலை உணவு பொருட்கள் வாங்க பொதுமக்கள் வந்தனர். அப்போது கைரேகை பதிவு செய்யும் பயோமெட்ரிக் எந்திரம் பழுதானது. இதனால் பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகிக்கப்படவில்லை.

மேலும் கடை ஊழியர், எந்திரத்தை சரி செய்தவுடன் பொருட்கள் வினியோகிக்கப்படும் என்று பொதுமக்களிடம் கூறினார். ஆனால் பொதுமக்கள் கையால் எழுதி உணவு பொருட்கள் வினியோகியுங்கள் என்று கூறியதாகவும், அதற்கு கடை ஊழியர் எந்திரத்தை சரி செய்தால்தான், உணவு பொருட்கள் வினியோகிக்கப்படும் என்றும் கூறியதாக தெரிகிறது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடை முன்பு உள்ள செட்டிகுளம்-செஞ்சேரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார், மாவட்ட கலெக்டர் கற்பகத்தை செல்போனில் தொடர்பு கொண்டனர். செல்போனில் பேசிய கலெக்டர், ரேஷன் கடை ஊழியரை கையால் எழுதி உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய உத்தரவிட்டார். இதனால் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு ரேஷன் கடையில் கையால் எழுதி உணவு பொருட்கள் வினியோகிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்