வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது:தேவர் குருபூஜைக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்க பரிசீலனை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தேவர் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது. கூடுதல் அரசு பஸ்கள் இயக்க பரிசீலனை செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-10-19 21:57 GMT


உசிலம்பட்டியை சேர்ந்த வக்கீல் சங்கிலி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு அனைத்து கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பு நிர்வாகிகள் மற்றும் மக்கள் மரியாதை செலுத்துவது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இதற்காக வருகின்றனர். ஆனால் சொந்த வாகனம் இல்லாதவர்கள் வாடகை வாகனங்கள் மூலம் பசும்பொன் கிராமத்திற்கு வந்து மரியாதை செலுத்தி வருவதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே, வாடகை வாகனங்கள் மூலம் பசும்பொன் செல்ல அனுமதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாடகை வாகனத்தில் செல்வதற்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் இதனை அனுமதிக்க முடியாது. அதற்கு பதிலாக அனைவரும் தடையின்றி சென்று வர வசதியாக 5 மாவட்டங்களில் இருந்து சுமார் 500 பஸ்கள் இயக்கப்படுகின்றன என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் "மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்குவது போல, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும். வாடகை வாகனங்களில் செல்ல அனுமதியில்லை என்று அரசு பிறப்பித்த தடை உத்தரவு செல்லும்" என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்