நெல்லூர்பேட்டை ஏரியின் கரைகள் நவீன முறையில் சீரமைப்பு
வேலூர் மாவட்டத்தின் பெரிய ஏரியான நெல்லூர்பேட்டை ஏரியின் கரைகள் நவீன முறையில் சீரமைக்கப்பட்டது. தற்போது ஏரியில் தண்ணீர் தேங்கி கடல்போல் காட்சியளிக்கிறது.
வேலூர் மாவட்டத்தின் பெரிய ஏரியான நெல்லூர்பேட்டை ஏரியின் கரைகள் நவீன முறையில் சீரமைக்கப்பட்டது. தற்போது ஏரியில் தண்ணீர் தேங்கி கடல்போல் காட்சியளிக்கிறது.
2 ஆண்டுகளாக ஏரி நிரம்பியது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரி என்ற செருவங்கி பெரிய ஏரி வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகும். நெல்லூர்பேட்டை பெரிய ஏரி 400 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். அதில் 100 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்கலாம்.
மோர்தானா அணை வலதுபுற கால்வாயில் வரும் வெள்ளநீரும், கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வரும் வெள்ளநீரும் ஏரிக்கு வந்து நிரம்பும். அந்த ஏரியால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். அக்கம் பக்கத்தில் உள்ள ஏராளமான ஆழ்துளை கிணறுகள், வீட்டு கிணறுகளில் நீர்மட்டம் உயரும்.
கடந்த பல ஆண்டுகளாக ஏரி நிரம்பாமல் இருந்தது. தற்போது 2 ஆண்டுகளாக ஏரி நிரம்பியது. கடந்த ஆண்டு ஏரியில் நீர் நிரம்பி இருந்தபோது, நவம்பர் மாதம் 21-ந்ந்தேதி திடீரென ஏரிக்கரை 100 மீட்டர் நீளத்துக்கும், 5 அடி உயரத்துக்கும் பூமிக்குள் உள்வாங்கியது. இதனால் ஏரிக்கரை பலவீனம் அடைந்தது.
சீரமைக்க ஆய்வு
நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் ஏரிக்கு சென்று கரை உடையாமல் இருக்க இரவு பகலாக மணல் மூட்டைகளை அடுக்கும் பணிகளில் ஈடுபட்டனர். எனினும், ஏரி எந்த நேரத்திலும் உடையலாம், என அச்சம் ஏற்பட்டதால், கோடி போகும் இடமான செட்டிகுப்பம் பகுதியில் ஏரியின் கரை உயரத்தை உடைத்து, அதில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர். இதனால் 60 சதவீதம் தண்ணீர் மட்டுமே ஏரியில் நிரம்பும் நிலை இருந்தது. ஏரிக்கு வரும் தண்ணீரும் வீணாக வெளியேறி வந்தது.
அதைத்தொடர்ந்து சென்னை தரமணியில் இருந்து வல்லுனர் குழு ஏரிக்கு வந்து, கரையில் துளையிட்டு அதன் மண் மாதிரியை சேகரித்து பரிசோதனை செய்தனர். நவீனமுறையில் ஏரிக்கரைகளை சீரமைக்க வேண்டும் என ஆய்வு குழுவினர் யோசனை தெரிவித்தனர்.
நவீன முறையில் கட்டப்பட்டது
உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் 100 மீட்டர் நீளத்துக்கு கார்த்திகேயபுரம் பகுதியில் ஏரிக்கரையில் எந்திரங்கள் மூலம் துளையிட்டு, அதில் கம்பிகள் கட்டி சிமெண்டு கான்கிரீட் கலவையால் பில்லர் எழுப்பி, அதன் மீது 100 மீட்டருக்கு மேலாக கான்கிரீட் தளம் அமைத்தனர். அதன்மேல் மண் கொட்டி கரைைய பலப்படுத்தினர்.
அதேபோல் ஏரியில் இருந்து வெள்ளநீர் வெளியேறும் பகுதியில் பல அடி உயரத்துக்கு உடைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் 50 அடி நீளத்துக்கும், 5 அடி உயரத்துக்கும் ஏரிக்கரை மீண்டும் பல லட்சம் ரூபாய் செலவில் நவீன முறையில் கட்டப்பட்டது. கடந்தசில நாட்களாக நடந்து வந்த பணி சமீபத்தில் முடிந்தது. இதனால் ஏரிக்கு வரும் தண்ணீர் வெளியேறாமல் தடுத்து, மீண்டும் பழைய நிலைக்கு தேக்க வைக்கப்பட்டு வருகிறது, என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடல்போல் காட்சியளிக்கிறது
இந்தப் பணிகளால் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீரை தேங்கினாலும் கரைகள் உடையும் அபாயம் இல்லை. அதேபோல் ஏரி கோடிப்போகும் பகுதியில் மீண்டும் சுவர் கட்டப்பட்டதால் தண்ணீர் வீணாக வெளியேறுவது தடுக்கப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையால் நெல்லூர் பேட்டை ஏரியில் தண்ணீர் தேங்கி கடல்போல் காட்சியளிக்கிறது.