புதுக்கோட்டையில் கல்லூரி மாணவ-மாணவிகள் விடுதிகள் சீரமைப்பு

புதுக்கோட்டையில் கல்லூரி மாணவ-மாணவிகள் விடுதிகள் சீரமைக்கப்பட்டது.

Update: 2022-12-05 18:45 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் (நவம்பர்) 23-ந் தேதி சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புதுக்கோட்டையில் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர், மாணவிகளுக்கான விடுதிகளை பார்வையிட்ட போது அங்கு அடிப்படை வசதிகள் சரியாக இல்லாமல் இருந்ததால் குழுவினர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இதில் மாணவர் விடுதியில் சமையல் அறை உள்பட வளாகத்தில் சுகாதாரம் இல்லாமல் இருந்ததால் அதனை சீரமைக்க உத்தரவிட்டனர். சட்டமன்ற குழுவினரின் ஆய்வை தொடர்ந்து மாணவ-மாணவிகள் விடுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கிடையில் சமையலர்கள் 2 பேர் வேறு விடுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதியை புதுப்பொலிவுடன் மாற்ற வர்ணம் பூசப்பட்டது. மேலும் சமையல் அறையை முழுவதுமாக சுத்தம் செய்து வர்ணம் பூசினர். கழிவு நீர் செல்ல வழியில்லாமல் இருந்ததை குழாய்கள் அமைத்து தற்போது சரி செய்துள்ளனர். இதேபோல வளாகத்தில் புதர் மண்டி கிடந்ததையும் சரி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல மாணவிகள் விடுதியிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தி உள்ளனர். பாய், தலையணை, போர்வை வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்