கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தாமரைக்குளம்:
வீடியோ வைரல்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா, ராங்கியம் பகுதியை சேர்ந்தவர் பொற்செல்வி (வயது 45). இவர் ஆண்டிமடம் தாலுகாவில் உள்ள திருக்களப்பூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் ஒரு விவசாயியிடம் வங்கி கடன் பெறுவதற்கான படிவத்தில் கையொப்பம் இடுவதற்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோவை நேற்று முன்தினம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளியிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த வீடியோ வைரலாக பரவியது.
பணியிடை நீக்கம்
இதைத்தொடர்ந்து இந்த வீடியோ குறித்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் விசாரணை நடத்தினார். இதையடுத்து கையொப்பம் இடுவதற்கு லஞ்சம் கேட்டதாக கிராம நிர்வாக அலுவலர் பொற்செல்வியை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.