வேலூர் மாநகராட்சி உதவி பொறியாளர் பணியிடை நீக்கம்

வேலூர் மாநகராட்சியில் மோட்டார்சைக்கிள், ஜீப்பை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டது தொடர்பாக உதவி பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-07-05 16:45 GMT

வேலூர் மாநகராட்சியில் மோட்டார்சைக்கிள், ஜீப்பை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டது தொடர்பாக உதவி பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சாலை அமைப்பு

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள் அமைத்தல், மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முறையாக நடப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் மாநகராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரி காளியம்மன் கோவில் தெருவில் இரவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை தரமற்றதாக அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேவேளையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை அப்புறப்படுத்தாமலேயே சிமெண்டு சாலை அமைத்தனர்.

இதுகுறித்த புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் அனைத்து தரப்பு மக்களிடையே அதிகாரிகளின் பணி குறித்து கேலியாக விமர்சிக்கப்பட்டது.

அதேபோன்று சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் தார்சாலை அமைக்கப்பட்டபோது அங்கு பல ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜீப்பை அகற்றாமல் சாலை அமைத்தனர். இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.

பணியிடை நீக்கம்

இந்த இருசம்பவங்கள் தொடர்பாக மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சியின் 3-வது மண்டலத்தை சேர்ந்த உதவி பொறியாளரான பழனி என்பவர் முறையாக கண்காணிக்கவில்லை என்பது தெரியவந்தது.

பணிநடைபெறும் போது அங்கு சாலை எவ்வாறு அமைக்கப்படுகிறது?, தரமானதாக அமைக்கப்படுகிறதா? என்று பொறியாளர் கண்காணிக்க வேண்டும். அவர் முறையாக பணிகளை கண்காணிக்காமல் இருந்ததால் அவரை பணியிடை நீக்கம் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.

மேலும் இந்த பணிகளை கண்காணிக்கும் தனியார்துறையை சேர்ந்த திட்ட கண்காணிப்பு குழுவை சேர்ந்த பொறியாளர்களையும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதில் வேறு பொறியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்