கே.எஸ்.அழகிரி கொடி ஏற்ற இருந்த கம்பம் அகற்றம்

கே.வி.குப்பம் அருகே காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கொடியேற்ற இருந்த கொடி கம்பம் அனுமதியின்றி வைக்கப்பட்டதால் அகற்றப்பட்டது. இதனால் அவர் கொடியேற்றாமல் சென்றார்.

Update: 2023-01-07 17:18 GMT

கொடியேற்று விழா

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயண நினைவு கொடிக்கம்பம் புதிதாக அமைக்கப்பட்டு, அதில் கல்வெட்டும் பதிக்கப்பட்டு, கட்சியின் கொடியேற்று விழாவுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வந்திருந்தார்.

அப்போது ஒரு தரப்பினர் இந்த கல்வெட்டும், கட்சி கொடிக் கம்பமும் அனுமதி பெறாமல் திடீரென்று கட்டப்பட்டது. இதை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லை என்றால் நாங்களும் இதே போல் கொடிக்கம்பம் அமைத்து கல்வெட்டு வைப்போம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

அகற்றம்

இதை அறிந்த மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கொடிக் கம்பத்தில் ஏற்றத் தயாராக கொடி கட்டப்பட்டு இருந்தும் அதை ஏற்றாமல் சிறிது நேரம் வாழ்த்திப் பேசி விட்டு சென்று விட்டார். இதைத் தொடர்ந்து கட்சியினர் கொடிக்கம்பத்தை அகற்ற ஒப்புக்கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து சில மணி நேரங்களில் போலீஸ் பாதுகாப்புடன் தாசில்தார் அ.கீதா, துணை தாசில்தார்கள் அ.பிரகாசம், ப.சங்கர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் முன்னிலையில், நெடுஞ்சாலை துறையினர் கொடிக்கம்பம், மேடை, கல்வெட்டுகளை இடித்து அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்