தாமரைக்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்புகளை மீன்வளத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
பெரியகுளம் அருகே மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் தாமரைக்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை கடந்த ஆண்டு முத்துப்பாண்டி என்பவர் குத்தகைக்கு எடுத்திருந்தார். இந்த ஆண்டு அதனை புதுப்பிக்காததால், அவருடைய குத்தகை ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கண்மாய் கரைப்பகுதியில் ஆக்கிரமித்து முத்துப்பாண்டி அமைத்து இருந்த தகரத்தாலான கூடாரம் மற்றும் பொருட்களை அகற்றவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த ஆக்கிரமிப்பை அகற்றும்படி வைகை அணை மீன்வளத் துறையினர் அறிவுறுத்தினர். ஆனால் முத்துப்பாண்டியின் பொருட்கள் அகற்றப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா, ஆய்வாளர் கவுதமன் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் கண்மாய் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பின்னர் அந்த பொருட்களை லாரி மூலம் வைகை அணையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.