ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி, பூ, பழக்கடைகள் மற்றும் மொத்த, சில்லரை விற்பனை மளிகை கடைகள் உள்ளன.
அதனால் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
நேதாஜி மார்க்கெட்டின் உள்ளே பொதுமக்கள் மற்றும் காய்கறி, பூ, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் வந்து செல்வதற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளின் பொருட்கள் வைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமிக்கு புகார்கள் வந்தன.
அவரின் உத்தரவின்பேரில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி தலைமையில் மாநராட்சி ஊழியர்கள் இன்று காலை 8 மணி அளவில் சாரதி மாளிகையின் பின்புறம் உள்ள சாலையை ஆக்கிரமித்து மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய இரும்பு, பேப்பர், பிளாஸ்டிக் பொருட்களை அங்கிருந்து அகற்றினர்.
இந்த நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில் காலை 11 மணியளவில் மாநகராட்சி ஊழியர்கள் மீண்டும் ஆய்வு செய்தனர்.
அந்த பகுதியில் வியாபாரிகள் மீண்டும் சாலையை ஆக்கிரமித்து கடையின் பொருட்களை அடுக்கி வைத்திருந்தனர்.
இதையடுத்து அவற்றை அப்புறப்படுத்திய மாநகராட்சி ஊழியர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து பொருட்கள் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.