ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
சிவகாசி அண்ணா மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
சிவகாசி,
சிவகாசி அண்ணா மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
காய்கறி மார்க்கெட்
சிவகாசி நகரின் மையப்பகுதியில் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு 142 கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் உரிய ஏலம் விடப்பட்டு நடத்தப்படுகிறது.
இந்தநிலையில் மார்க்கெட்டில் காலியாக உள்ள பகுதிகளில் சிலர் உரிய அனுமதியின்றி கடைகளை நடத்தி வந்தனர். சிலர் நடைபாதையில் கடைகளை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் சென்று, வர போதிய வசதி இல்லாமல் இடநெருக்கடி ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள், மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில் கமிஷனர் சங்கரன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட்டை ஆய்வு செய்தார்.
ஆக்கிரமிப்பு கடைகள்
அப்போது உரிய அனுமதியின்றி கடைகள் நடத்தி வந்த சிலரிடம் கடைகளை அகற்றிக்கொள்ளும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக யாரும் கடைகளை அகற்றாமல் தொடர்ந்து நடைபாதையிலும், காலி இடங்களிலும் கடைகளை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை அண்ணா காய்கறி மார்க்கெட்டுக்கு வந்து ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 15 கடைகளை அகற்றினர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு சம்பவம் நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள், காய்கறி வியாபாரிகளை எச்சரித்தனர்.