பழனி பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பழனி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அப்போது ‘ரேக்' சாய்ந்து அதிகாரி மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-09 16:43 GMT

பழனி பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக கடைகள் உள்ளதாகவும், திறந்தவெளியில் சிலிண்டர் வைத்து சமையல் செய்வதாகவும் நகராட்சிக்கு புகார் வந்தது. அதையடுத்து நகராட்சி சார்பில் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. ஆணையர் பாலமுருகன் தலைமையில் நகராட்சி பணியாளர்கள், ஊழியர்கள் நடைமேடைகளை ஆக்கிரமித்து வைத்திருந்த பொருட்களை பறிமுதல் செய்து வேனில் ஏற்றினர்.

இதற்கிடையே அதிகாரிகளை கண்டதும் கடைக்காரர்கள் சிலர் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றிக்கொண்டனர். இந்தநிலையில் கரூர் பஸ்கள் நிற்கும் நடைமேடையில் ஆக்கிரமித்து வைத்திருந்த 'ரேக்கை' நகராட்சி பணியாளர்கள் அகற்றி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த 'ரேக்' சாய்ந்து அங்கு நின்ற ஆணையர் மீது விழுந்தது. நல்லவேளையாக அவரும், அருகில் இருந்த நகராட்சி பணியாளர்களும் அந்த ரேக்கை தாங்கி பிடித்தனர். இல்லையெனில் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். 'ரேக்' விழுந்தபோது அதை தாங்கி பிடித்த நகராட்சி பணியாளருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்