ஆக்கிரமித்து செய்யப்பட்ட பயிர்கள் அகற்றம்

கே.வி.குப்பம் அருகே ஆக்கிரமித்து செய்யப்பட்ட பயிர்கள் அகற்றப்பட்டது.

Update: 2023-01-07 17:08 GMT

கே.வி.குப்பத்தை அடுத்த வேப்பங்கனேரி ஊராட்சிக்கு சொந்தமான 3 ஏக்கர் சர்கார் தோப்பு உள்ளது. இதில் 2 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் விவசாயம் செய்யத் தொடங்கினர். இதை அகற்ற வேண்டும் என்று ஊராட்சி சார்பில் தாசில்தார், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்து இருந்தனர். இதை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் அந்த இடத்தில் பயிர் செய்யப்பட்டு உள்ளதை அறிந்தததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி தலைமையிலான போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல்பனா, பெ.மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் அனீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று ஆக்கிரமிப்பு செய்து பயிரிடப்பட்டிருந்த பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.

அப்போது வழக்கு முடியும் வரை இந்த இடத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அதிகாரிகள் எழுத்து மூலம் பெற்று சென்றனர். இதேபோல் ஒரு மாதத்திற்கு முன்பு இந்த இடத்தை பயன்படுத்த முயற்சி செய்தபோது ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போதும் ஆக்கிரமிப்பாளர்கள், இந்த நிலத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்று எழுதிக் கொடுத்திருந்தனர். இதையும் மீறி தற்போது செயல்பட்டுள்ளனர். அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்